Saturday, May 05, 2012

IPL5 - RCB vs KXIP - இதல்லவோ டி-20 ஆட்டம்!

IPL5 - RCB vs KXIP - இதல்லவோ டி-20 ஆட்டம்! - எ.அ.பாலாநேற்று சின்னசாமி அரங்கில் சில நம்ப முடியாத விஷயங்கள் நடந்தன! டாஸில் வென்ற டேவிட் ஹஸ்ஸி அதற்கு முந்தைய நாள் பெய்த மழை காரணமாக முதலில் பந்து வீச முடிவு செய்தது, சரியான தேர்வு என்று தான் சொல்ல வேண்டும். பங்களூர் அணி தொடக்கத்திலேயே அடிதடிக்கு அஞ்சாத அகர்வாலை இழந்தது. இதுவரை நடந்த ஆட்டங்களில் ”நிறத்துக்கப்பால்” காணப்பட்ட பிரவீன் குமாரின் பந்து வீச்சை விவரிக்க/வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!!! 4-0-8-0.

கெய்ல், விராத் கோலிக்கு எதிராக இத்தகைய பந்து வீச்சை அதி அற்புதம் என்று தான் கூறுவேன்! அவர் பந்து வீச்சில், பந்து காற்றிலும், பிட்ச் ஆனபின்னும், ஒரு குடிகாரனைப் போல நிலை தடுமாறியதில், கெய்ல் என்ற புலி எலியானது, சற்றே ஃபார்மில் இல்லாத கோலி சுண்டெலியானது ;-) 9 ஓவர்களில் பங்களுர் எடுத்தது 48 ரன்கள் மட்டுமே.அடுத்து பந்து வீச வந்த சவ்லாவையும், அவானாவையும் எதிர்த்து, கெய்ல் கோர தாண்டவம் ஆடியபோதும், ஆசார் மெஹ்மூதின் பந்து வீச்சில் அவரது டி20 அனுபவம் மிளிர்ந்தது. 16வது ஓவரில் மெஹ்மூத் கெய்லை (71, 42 பந்துகளில்) வீழ்த்தினார். அடுத்த ஓவரில் கோலியும் காலி. 17 ஓவர்களில் ஸ்கோர் 135-3. மெஹ்மூத் தான் வீசிய 20வது ஓவரில், டிவிலியர்ஸ், மெக்டொனால்ட் விக்கெட்டுகளை சாய்த்து, நான்கே ரன்கள் கொடுத்து தனது அருமையான ஸ்பெல்லை (4-0-20-3) பூர்த்தி செய்தார்! பங்களூர் மொத்தம் 158 ரன்கள்.

பஞ்சாபின் துரத்தல் சுறுசுறுப்பாகத் தொடங்கியது. மந்தீப் சிங், சாகீர் கானை ஒரு கிளப் பந்து வீச்சாளரரைப் போல அணுகியதில், மார்ஷ் விக்கெட்டிழந்தும், ஸ்கோர் 8 ஓவர்களில் 70/1 என்று பஞ்சாப் ஆரோக்கியமான நிலையில் இருந்தது! அப்பண்ணா வீசிய 9வது ஓவரில் மந்தீப் அவுட். களமிறங்கிய கேப்டன் ஹஸ்ஸி, அப்பண்ணா வீசிய 13வது ஓவரிலும், பதான் வீசிய 16வது ஓவரிலும் செய்த துவம்சம் காரணமாக, பஞ்சாப் ஸ்கோர் 146-2. ஹஸ்ஸி 41 ரன்கள், 22 பந்துகளில் !!!

4 ஓவர்களில் 13 ரன்களே தேவை (8 விக்கெட்டுகள் கையில்) என்று தோற்கவே முடியாத நிலையில் இருந்தபோது, ’தோற்றே தீருவோம்’ என்று பஞ்சாப் பிரம்ம பிரயத்தனத்தில் இறங்கி, Harakiri செய்யவிருப்பதை அறியாத நான், சில மணித்துளிகள் வேறு சேனலுக்குத் தாவி மீண்டும் திரும்பி வந்து பார்த்தால், சைனியும், மஹ்மூத்தும் அவுட்டாகி, ஸ்கோர் 151-4. 14 பந்துகளில் 8 ரன்கள் என்பது ஹஸ்ஸி இருக்கையில் எளிது என்றபோதும், சின்னசாமியே ஏனோ டென்ஷனில் இருந்த மாதிரி தோன்றியது என் பிரமையா என்று தெரியவில்லை :-)

சாகீர் வீசிய அருமையான 19வது ஓவரில், 2 ரன் அவுட் (ஹஸ்ஸி, நய்யார்), 2 ரன்கள் மட்டுமே! அதாவது, 17,18,19-வது ஓவர்களில் பஞ்சாப் எடுத்தது 8 ரன்கள், இழந்தது 4 விக்கெட்டுகள், அதில் 3 ரன் அவுட் !!!! இந்த நம்ப முடியாத மகா கூத்துக்கு ஒரே காரணம், மர்ஃபியின் II Law of Thermodynamics --- Things get Worse under Pressure ;-) இறுதி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 2 dot பந்துகள், 3வதில் 2 ரன்கள், நாலாவதில் 1 ரன். இப்போது 2 of 2 தேவை. நிற்க!

பெங்களுர் ஜெயிப்பது, சென்னையின் அடுத்த சுற்று தகுதி வாய்ப்புக்கு நல்லதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், ப்ரீதி ஜிந்தாவின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த டென்ஷனைப் பார்த்து மனம் கலங்கியே, பஞ்சாப் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டி விரும்பினேன் என்ற உண்மையை (இதை ஏதாவது ஒரு அனானி நண்பர் கண்டுபிடித்து கமெண்ட் போடுவதற்குள்) நானே சொல்லி விடுவது உத்தமம் ;-) அந்த 5வது பந்தை பியுஷ் சாவ்லா கூலாக சிக்ஸர் அடித்து, ப்ரீதியை டென்ஷனிலிருந்து விடுவித்தார்!

இது போன்ற “நகம் கடி” ஆட்டங்களை வைத்துப் பார்க்கும்போது டி-20 கிரிக்கெட்டுக்கு சூரியனைப் போன்ற பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பது எள்ளளவும் சந்தேகமில்லை! பின்னர் ப்ரீதியை பேட்டி எடுத்தபோது, இறுதி ஓவரில் தனக்கு இதயமே நின்று விடுவது போல உணர்ந்ததாக சந்தோஷமாகவே கூறினார்! ஆக, பஞ்சாப் அடிக்கடி ஜெயித்து, ப்ரீதி ஜிந்தா போன்ற மெல்லிய இதயம் படைத்தவர்கள், ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருப்பது எல்லாருக்கும் மகிழ்ச்சி தானே! என்ன நான் சொல்றது :-)

Glossary:
நகம் கடி - NAIL BITING
நிறத்துக்கப்பால் - OFF COLOUR

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails